ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

மான்மியம்









ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் மான்மியம்

காப்பு

1. ஓங்கார நாதமே உலகின் முதலொலி
  ஆமிதன் உருவமே ஐங்கரன் முகத்தொளி
  ஆங்காரம் நீங்குமே அவனைத் துதித்துழி
  நாமுமைத் துதித்தோமிப் பாமாலைக்குக் காப்புநீ.

சரஸ்வதி துதி

2. வெண்தாமரையிலே வீற்றிருக்கும் தாயே
  உண்மையுருவகமாய் உருவானாய் நீயே  
  எண்ணங்கள் கவியாய் உருவாக்குவாயே
  பண்ணுக்குத்தாயே பணிந்தேன் உனையே.  
 
விருத்தம்
சிவன், விஷ்ணு, பிரமா, தேவர், தேவதைகள் துதி.

3. சீருற்ற சிவனுமையை வைரவரைக் கௌரியை திருநந்திதேவர்தனையும்
  செருவீரபத்திரரை ஐயனை விட்டுணுவை சேமமடு பிள்ளையாரை  
  பேருற்ற கண்ணகையம்மனை வினாயகபுரத்தைச் சேர்நாகதம்பிரானை
  தாருற்ற சண்டேஸ்வரர்தனை பிரமனை தகுதிபெறு நாச்சிமாரை
  நீருற்ற வருணனை வாயுவைக் கனலை நல்வாலபூரணியம்மனை
  நேருற்ற அலைகல்லுக்குளத்திலே மேவிய மாரியம்மனையும் போற்றி
  ஆறுமுகத்தான்புதுக்குளம்தன்னிலே வள்ளி தெய்வானையோடு
  அருளுமெம் கந்தனின் புகழினைப் பாடவேயவரடி போற்றினேனே.


ஆலய அமைவிடம்  

1. அகண்டவிப் பிரபஞ்சம் தன்னிலே மேவிய ஆயிரத்தோடு எட்டு
  கோடியதாகுமாம் அண்டங்கள் உண்டென்று கூறுமே பண்டைநூல்கள்  
  பகன்றவிக் கோளங்கள்தன்னிலேயொன்றான பார் என்ற கோள்தன்னிலே
  பகுத்திட்ட கண்டங்களைந்துள்ளே ஆசியாப் பகுதியின் தெற்கு மேவும்
  நிகண்டுகள் சாற்றிடும் இந்துமாக்கடலிலே இலங்கிடும் மணியாகவே
  இலங்கைநன்நாடு சிறு தீவாக ஒளிருதே இந்தியாயருகாகவே
  தகன்றிடும் ஈழத்தின் இதயத்தின் பகுதியைச் சார்ந்திடும் வவுனியாவின்  
  தகுதியாய் உத்தர திசையிலேயுள்ளது ஓமந்தை என்றநகரே.

2. கொளக்கொள ஈந்திடும் வன்னிமாநகரிலே குடியிருப்புக்கள் நிறைந்தும்  
  குளங்கள்பலகொண்டதாய் விளங்கிடும் ஓமந்தைகூடியே நாடிச்சென்றால்
  விளக்குவைத்தகுளம் பன்றிக்கெய்தகுளம் மேவியே சந்திசேர்ந்து
  கிழக்குத்திக்கான சிறுசாலையிலேகியே இரண்டரைக்கல்தாண்டினால்  
  அழகுக்குஅழகான மரையடித்தகுளம் அப்பாலும் ஒருகல் சென்றால்
  நிழல்சூழ்ந்த செங்காரஆத்திமோட்டைக்குளப் பிள்ளையாரைப்போற்றலாம்   
  வளம்பெறும் சோலைகள் சாலைகள் அழகாக வகுத்த நல்லூராகிடும்
  உளத்தினைக் கவர்ந்தாறுமுகத்தான்புதுக்குளம் ஒளிருமே கிழக்காகவே.


3. மாமரச்சோலைகள் வாழைகள் காய்கனி வழங்கும் பயன்மரங்கள்  
  வாவென்றழைப்பதுபோலவே தென்றலில் வளைந்தாடும் தென்னைமரங்கள்  
  ஓவென்றுகாற்றிலே கூவிடும் வானோக்கி ஓங்கிவளர் நிழல்மரங்கள்  
  பாவாணர்பாடிடும் இயற்கையெழில் பொலிகின்ற பாங்காய்நிறைவளங்கள்  
  நேரானசாலையில் இருமருங்காகவே நிறைந்த நற்குடிகள் மனைகள்  
  சோர்விலா ஆடவர் பெண்டிர்கள் வாழ்கின்ற சுவர்க்கபுரி போலாகிடும்  
  ஆறுமுகத்தான்புதுக்குளமென்கின்ற அழகான வள ஊரிலே
  அருளாட்சிபுரிகின்ற சிறீகந்தசுவாமியின் ஆலயமமைந்ததன்றே.

4. மருதமொடுமுல்லைநிலமாகிய பரப்பினிடை வானோக்கி வளர்ந்தநல்ல
  மருதமரச்சோலையும் பாலைமரச்சோலையும் பாங்காய் நிழல்பரப்ப
  ஒருபெரிய ஆலமரமுயர்ந்தோங்கிப் படர்ந்துமே உலகளந்தானையொப்ப
  பெருவயலில் நெற்கதிர்கள் தலைசாய்ந்துநிற்பதோ பலகோடிபக்தரொப்ப
  அருகாகச்சலசலத்தோடுகிற கங்கையோ பெரும்பாவமனைத்தும்போக்கும்  
  விருப்போடு இப்பதியைவந்துமேசேவித்தால் வேண்டியதெல்லாம்கிடைக்கும்   திருபெற்ற இப்பதியை வருடிவரும் தென்றலோ தீமையாவையுமொழிக்கும்
  அருளாளர் கந்தசுவாமிபெயரோதினால் அல்லல் எல்லாம் தீருமே.


சந்நிதிகள்
5. வெற்றி வேல் வீரவேல் சூரனையழித்தவேல் மூலத்தின் அருள்பாலிக்க  
  முற்படுபூசையைப் பெற்று அருள்புரி அண்ணனும் கோவில் கொள்ள
  சொற்கரிய அழகோடு உற்வக்கந்தனுடன் வள்ளி தெய்வானை வைக
  பொற்பீடமதனிலே அண்ணர் வினாயகர் அருகாய் அமர்ந்திருக்க
  உற்சவச்சந்நிதி தன்னிலமர்ந்துமே பக்தர் குறைகள் போக்க
  ஊரவர் யாவரும் கூடியே விரதங்கள் உறுதியாய்ப் பற்றிநிற்க
  கற்கோவில் ஒன்றிலே காவல்பைரவர் கருணையாய்க் கோவில்கொள்ள  
  கண்டாமணியுயர் கோபுரம்தன்னிலே கணாரென்றொலி செய்யுமே.  


உற்சவங்களும், விரதங்களும் விசேடபூசைகளும்.

6. நித்தியபூசைகள் இருகாலமாயங்கு நிறைவாய் நடந்தேறுமே
  தைப்பொங்கல் நாளிலே சொற்கரியபூசைகள் சிறப்பாய் நடக்குமங்கே  
  இத்திங்கள் பூசத்தின் நெற்புதிர் பொங்கியே நிறைவாயமுது கொள்வார்  
  நத்தியே மாசி மகம் சிவராத்திரிதன்னிலே மதித்தே விரதமேற்பார்  
  உத்தரப்பங்குனித்திங்கள் நாள்தன்னிலே உவந்துமே நோற்றிடுவார்  
  சித்திரைப்புத்தாண்டு சிறப்பாகும் பூரணை சித்திரபுத்திரர்கதைபடித்தே
  இத்தனையோடு வைகாசிவிசாகத்தின் விரதங்கள் மேற்கொள்ளுவார்
  உத்தரத்தானியதனிலும் கோவிலில் உயர்விசேடமாகுமே.

7. ஆடிப்பிறப்போடு ஆடியமாவாசையும் அதிவிசேடமாகுமே
  தேடிவருகின்ற ஆவணி;த்திங்களில் வளர்பிறைச்சஷ்டி தன்னில்
  கூடியே ஆரம்ப உற்சவமாகுமே தொடருமே பத்துநாட்கள்
  கோடியதாகுமே அந்நாளில் பக்தர்கள் குழுமியே விழாக்காணுவார்
  பாடியே பத்தாம்நாள் கந்தபுராணத்தின் வள்ளிதிருமணமாம்  
  தேடியே பக்தர்கள் வந்துமே கந்தனின் புராணப்பயன் கேட்பார்
  முடியவே பத்தாம்நாள் பௌர்ணமி முருகனும் முதுதீர்தமாடிடுவார்
  நாடியே வந்திட்ட மறுநாள் நிறைமணி நன்றாய் நடந்திடுமே.  

8. புரட்டாதி மாதத்தில் வளர்கின்ற பிரதமை நவராத்திரிஆரம்பம்  
  தொடர்கின்ற ஒன்பதுநாட்களும் சக்திக்கு விசேட பூசையாகுமே
  படர்ந்திட்ட விஜயதசமியில் பாலகர்க்கு ஏடுதொடக்கி வைப்பார்  
  நடந்திடும் ஐப்பசி வெள்ளிதோறும் நோன்பும் தீபாவளியோடு
  தொடங்கும் பிரதமை கந்தர்சஷ்டி நோன்பு தொடருமே ஆறுநாட்கள்
  தடக்கைவேற்குமரனின் யுத்தகாண்டத்தினைப் படித்தே பயனுரைப்பர்
  கெடவந்த சூரனின் போரினை வாலிபர் செய்துமேகாட்டி நிற்பர்
  சுடச்சுடப் பாரணை மறுநாளில் காலையில் மாபெரும் விருந்தாகுமே.

9. மறுநாளில் வருகின்ற திருநாளில் தெய்வானை திருமணப்படலமாகும்
  திருவாயலங்கரித்தே கந்தன் தெய்வானை திருமணம் நடந்தேறுமே
  ஒருங்காக வந்துமே பக்தர் புராணத்தை ஓதிப் பயன் விரிப்பார்
  நெருங்கியே வருகின்ற திருக்கார்த்திகைப்பரணி குமராலயதீபமும்
  சிறப்பாய் நடக்குமங்கே பக்தர் நாடியே சேர்ந்து விரதம் நோற்பார்
  பெருங்கதைப் பிள்ளையார் விரதம் தொடங்குமே தேய்பிறைப் பிரதமையில்
  அருந்தாமல் இருபத்துரண்டுநாள் நோற்றுமே பிள்ளையார் கதைபடிப்பார்
  மார்கழி வளர்பிறைச்சஷ்டியில் நிறையுமே பிள்ளையார் பெருநோன்பே.

10. மார்கழித்திருவொம்பாவை விசேடமாம் பள்ளிஎழுச்சியோடு
   மாரிகாலத்ததிகாலையில் ஆரம்பம் திருவாசகமமோதுவார்
   திருவாதவூரரடிகள் புராணத்தையோதிப் பயன் விரிப்பார்
   வருகின்ற பத்துநாட்கள் தொடருமே புராணத்தோடு பயனும்
   திருவாதிரையன்று கும்பத்தோடு வலம் வந்துவணங்கியுமே
   பெருவிருப்போடுமே பெருமானுடன் வந்து திருதீர்த்தமாடிடுவார்
   வருடமுடிவிலும் பெருபூசையிவ்விடம் வளமாய் நடத்தியுமே
   விரும்பும் பலப்பல விசேடபூசைகள் விழாவாய் நடந்திடுமே.


உபயம்செய்யும் ஊர்கள்
வேறு
11. ஆறுமுகத்தான்புதுக்குளத்தின் அறுமுகன்ஆலய உபய ஊர்கள்
   பசுமைநிறை பன்றிக்கெய்தகுளம் பக்கத்தின் விளக்குவைத்தகுளம்
   மாண்புடை மரையடித்தகுளமும் மருங்கின் பெரியபுளியங்குளம்
   செங்காரஆத்திமோட்டையோடு சீர்பெற்றிலங்கும் மாளிகையாகும்
அறனுடை நொச்சிக்குளத்தோடு அழகுடை அலைகல்லுப்போட்டகுளம்     வளம்பெறும் சேமமடுவான வகுத்த நல்லிரு பெரும் பிரிவும்
   விரும்பும் வினாயகபுரமும் சேரும் விளங்கும் சம்மளங்குளமுமாகும்
   சூழ விளங்குமிவ்வூர்களெல்லாம் அழகன் முருகனுக்குபயம் செய்யும்.


வரலாறு
வேறு
12. வன்னிமாநகரத்தின் வரலாற்றை ஆராய்ந்தால்
   எண்ணங்களுக்கெட்டா இயற்கையது தன்மைபோல்
   சொன்னார்கள் ஊகங்கள் தொடர்ந்தார்களாராய்ச்சி   
   தன்தனக்கு ஏற்றபடி சாற்றிடுவார் கொள்கைகளை.

13. சோழவள நாடு சோறுடைத்து என்றதுவும்   
   ஈழவள நாடதற்கு ஏற்றுமதி செய்ததென்றும்  
   பழமையிலக்கியங்கள் பகன்ற கதைகளெல்லாம்  
   வழமைகள் மாறி அழிந்தகதை ஆதியிலே.    

14. இருபதாம் நூற்றாண்டின் இருஅரைப்பின் பிரிவின்
   தெரிந்திருந்த உண்மைகளும் தேடிக்கேட்ட நிதர்சனமும்  
   கருவாகக் கொண்டிங்கு கவிதையாய்க் கூறுகிறேன்  
   வருங்கால வரலாறாய் வழங்கிடும் சத்தியமே.  

15. வன்னிமாநகரத்தின் வளம் நிறைந்த பகுதிகளில்  
   இன்றும் காணப்படும் இடிந்தழிந்த கோவில்களும்  
   தண்ணீரைத் தேக்கிவைத்த முறிந்தழிந்த கட்டுகளும்  
   பன்னெடுங்காலப் பழமைதனைச் சாற்றிடுமே.  

16. போராலோ பிணியாலோ புகழ்பெற்ற வன்னிநிலச்
   சீரார் நகரங்கள் சிற்றூர்களாய்க் குறுக  
   ஏராண்ட களனியெல்லாம் இருள் சூழ்ந்த காடாக  
   காராளர் கோவில்களும் கடிதழிந்து போயினவே.  

17. அழிவடைந்த கோவில்களில் அறுமுகத்தான் புதுக்குளத்து
   செழிப்பாய் இருந்தவொரு சிவகுருவின் ஆலயமும்  
   பொழில்சூழ் வனத்திடையே புதர் மண்டிப்போயங்கே
   எழிலாய் எழுவதற்கு எதிர்பார்த்திருந்ததுவே.

18. கருங்கல்லுத் தூண்கள் அருங்காட்சியாயிருக்க  
   பெருங்கோவிலொன்று நொருங்கியழிவடைந்து  
   மருங்காகப் பலிபீடக்கும்பம் மயூரசிற்பம்  
   ஒருங்காகக்காண உருக்குலைந்திருந்ததுவே.   

19. மரையடித்தகுளத்தினிலே வாழ்ந்திட்ட சின்னத்தம்பி  
   நிறைவான மனத்துடனே பொன்னம்மாவை மணந்து  
   குறைவில்லா இல்வாழ்க்கை கொண்டுநடத்தியதால்  
   சிரேட்ட புதல்வராய் சின்னையா அவதரித்தார்.  

20. கல்வித்தகைமை பெற்றார் நல்லாசிரியரானார்  
   சொல்லச்சிறப்பாகப் பண்டிதர் பட்டம் பெற்றார்  
   பல்லிடங்களும் சென்றார் பயனானார் மாணவர்க்கு
   தொல்லைதரும் காசநோய் தொடர்ந்தவரைப்பற்றியதே.

21. தகைமையுடையோரெல்லாம் தடுத்தாட்கொளலைப்போல்  
   வகையாகக் கந்தன் வரவழைத்தார் சந்நிதிக்கு   
   பகையாக வந்தநோய் மிகையாய் அலைக்கழித்த  
   தாகையினால் செல்லச் சந்நிதியில் தங்கிவிட்டார்.  

22. அன்னதானக்கந்தனது பாதமே தஞ்சமென்றே  
   எண்ணி வணங்கி இருந்த சிலநாளில்
   கண்ணயர்ந்து தூங்கியதிகாலையிலே சொற்பனத்தில்  
   சொன்ன துறவியின் சொல் துளைத்ததுவேயாசானை.  


23. சொற்பனத்தில் வந்த அந்த விற்பனரின் கூற்றுணர்ந்து  
   கற்பிக்குமாசான்தன் திட்டத்திலே வரைந்து  
   முற்காலத்தேயழிந்த முருகனது கோவில்தனைப்   
   பொற்கோவிலாக்கப் பொறுப்புடனே புறப்பட்டார்.  

24. ஊர்திரும்பி வந்தார் ஒருங்கிணைத்தார் ஊரவரை  
   உற்றோரும் பெற்றோரும் ஊரிலுள்ள மற்றோரும்  
   கற்றோரும் சேர்ந்தார் கந்தனது ஆலயத்தோடு  
   உற்றதோர் ஊரமைக்க உறுதியாய்த் திட்டமிட்டார்.   

25. அரசாளுமன்றத்து அடங்காத்தமிழன் என்னும்         
   பிரபல்யம் வாய்ந்த சுந்தரலிங்கம்தன்னை  
   வரவழைத்து மதிப்பளித்து வைத்தனரே அடிக்கல்லு  
   பூரணையாம் சித்திரையில் பொலிந்த ஜயவருடம்.  

26. கோவிலில்லா ஊரில் குடியிருக்கலாகாதென  
   பாவில் பழமொழியைப் பயனாகக் கூறிவைத்தார்  
   மேவிய நல்லூரின்றிக் கோவிலும் பொருந்தாதே
   சேவிக்கும் மக்களுக்குச் சிறந்த நல்லூர் வேண்டும்.  

27. ஊரில் வசிப்பதற்கு உற்ற நற்குடிகள் வேண்டும்
   பாரில் நலம்கொண்ட பண்புள்ள மக்கள்வேண்டும்  
   ஏரின்தொழிலை இன்பமாய்க் கொள்வோர் வேண்டும்  
   சீரிய ஆசான்தன் சிந்தனையை ஓடவிட்டார்.

28. அற்றைய ஐம்பத்தெட்டில் அனுராதபுரத்தினிலே  
   கொற்றமாய் வர்த்தகத்தைக் கொண்ட தமிழர்கடை  
   சீற்றமாய்த் துவேசத்தால் தீயிட்டெரிக்கப்பட  
   மாற்றத்தைத் தேடி வந்தவரை வரவேற்றார்.   

29. பருத்தித்துறை நகரின் பாங்காய் அமைந்தவொரு  
   விரும்பத்தகுந்தநல்ல தும்பளைப் பகுதியினை  
   பிறப்பிடமாய்க் கொண்டிட்ட பேர்கள் பலர் வந்தார்  
   சிறப்பாயுபசரித்தே தம்திட்டத்தைச் சொன்னார்கள்.  

30. அன்னவரும் சம்மதித்தார் அயலவரும் ஏற்றார்கள்  
   ஒன்றாகக்கூடி ஊரை அமைக்கவெண்ணி   
   மன்றங்கள்கூட்டி அரசாங்கதிபர் ஒத்துழைக்க  
   அன்றுபகிர்ந்தளித்தார் அனைவருக்கும் காணிகளை.  

31. நேரானவீதியொன்று சீராயமைத்தார்கள்  
   கூரார் நெடுவேற் குமரனது கோவிலுக்கு  
   ஊராகக் காட்டை உருமாற்றுதற்காக  
   பாராட்டும்படியாகப் பலரங்கே ஒத்துழைத்தார்.   

32. காடுகளை வெட்டியுமே கட்டைகள் புரட்டியுமே  
   மேடுகளைத் தட்டியுமே பள்ளங்கள் நிரப்பியுமே  
   பாடுபட்டுச் சேனைகொத்தி பயிர்கள்பல நாட்டியுமே  
   நீடுபெற்ற ஊரமைக்க நிறைமுயற்சி செய்தனரே.

33. ஆனைபிளிறிவரும் அர்த்தராத்திரியினிலே  
   தீனை விரும்பியவை விளைபுனத்திலே நுளையும்  
   ஏனை மிருகங்களும் இட்டபயிற்கழிவு செய்யும்  
   சேனைதனை மக்கள் கண்விழித்துக் காத்திருப்பார்.

34. இன்னதோர் சூழ்நிலையில் இடிந்தழிந்த கோவிலது  
   முன்னரேயான முட்புதர்கள் மண்டியங்கே  
   பின்னியிருந்த பெருங்கற் குவியல்களைத்  
   தன்னியகற்றித் துப்புரவும் செய்துகொண்டார்.   

35. வன்னிமாநகரத்தின் வளமான சிற்றூர்கள்  
   உன்னி ஒழுங்கமைத்து உற்றவன்பர் பலரையும்  
   பொன்பொருள்கள் சேர்க்கப் புத்திமதி பலகூறி  
   எண்திசையுமேவி இயற்றினார் காரியங்கள்.   

36. அன்னவரும் சென்றார் அன்புடனே யாசித்தார்  
   கண்ணன் மருமகனின் கோவில் திருப்பணிக்காய்  
   பண்புடனே பலரும் பரிந்தளித்தார் பொன் பொருள்கள்  
   சின்iயா ஆசிரியர் சீரெண்ணம் ஈடேற.    

37. பக்தியுடையோரெல்லாம் பரிந்தளித்த நிதியாலே  
   சக்திவேல் தாங்கியவன் ஆலயமரும்பியதே    
   புத்திமுறையால் வரைந்த புதிய கற்கோவிலது  
   சித்திரமும் மரபு மறை சிறப்பாய்ப் பொருந்தியதே.  

38. வரைந்தநல் முறைப்படியே வகுத்தனரே ஆலயத்தை
   நிரையாக நான்காண்டு கல்வைத்துக் கடந்த பின்னர்  
   முறையாகக் கற்ற நற்சிற்பாசாரிகளைக் கூட்டி  
   மறை கூறும் படியே மதித்தே நிறைவேற்றினரே.


வேறு
39. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டாம் ஆண்டு
   ஆயதோர் ஆவணியின் சுபகிருது தமிழ்வருடம்  
   ஏயதோர் குடமுழுக்கு இயற்றினர் வேதவல்லோர்
   மேயநல் உற்சவங்கள் தொடர்ந்தன முறையினாக.  

40. கதிரவன் அரியில் வைகும் கார்மாதம் ஆவணியில்
   மதிவளர் சஷ்டிதன்னில் மாமறை வல்லோர் கூடி
   விதித்த நல்லாகமத்தின் தொகுத்த நன்மறைகளோதி
   பதியினில் தொடங்கும் மகா அலங்கார உற்சவமே.
                                          
41. தொடருமே பத்து நாட்கள் தூய நல்லுற்சவங்கள் 
   சுடருமே ஒளிரவாங்கே சுற்றிடும் சுவாமி வீதி  
   படருமே பக்தர் கூட்டம் பாற்செம்பு காவடிகளோடு 
   இடருமே நீங்கும் எல்லா வினைகளும் மாயும்தானே.  
                                        
42. ஆலயம் சூழவுள்ள அழகான கிராமமெல்லாம் 
   காலமதுணர்ந்து தத்தம் கடமைகள் தம்மைச் செய்தே 
   மேலான இன்பத்தோடு வேளாண்மைத் தொழிலைச் செய்து
   கோலமா மைஞ்ஞையேறும் குமரனைப் போற்றி வாழ்ந்தார். 
                                               
43. செல்வமும் பொருளும் பெற்று சீர்களும் சிறப்பும் பெற்று  
   நல்வளம் பொலியவாங்கே நயத்தொடு பலவும் பெற்று 
   கல்வியும் கலையுமோங்க காவிய நகரம்போல  
   சொல்லரும் சிறப்பினோடு சுகத்துடன் மக்கள் வாழ்ந்தார்.

44. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்து ஏழாமாண்டு    
   மேயின பிங்களத்தில் மிகநல்ல சுபதினத்தில்  
   ஆயின இரண்டாம் கும்ப அபிடேகம்தானுமங்கே  
   கோயிலின் மேலும் பல்திருப்பணி நிறைந்த பின்னர். 
                                             
45. ஒற்றுமையாக மக்கள் ஒருதனி முருகன்கோவில்   
   நற்திருப்பணிகள் மேலும் நடத்தியே பக்தியோடு  
   சொற்கரும் சிறப்பினோடு சுருதியின் படியேயான 
   அற்புத அபிடேகங்கள் அடுத்தடுத்தியற்றினாரே.         
                                               
46. கொடுவினைதன்னினாலோ குதர்க்கம்செய் மக்களாலோ 
   படுபாவம் முற்றிச்சூழ்ந்த பாதக குணத்தினாலோ 
   வடுநிறை கன்மத்தாலோ வளர்கின்ற அதர்மத்தாலோ 
   கடுகலி முற்றி வந்த காலத்தின் தன்மைதானோ.    
                                                
47. கொடியவர் சிலரினாலே வகுத்திட்ட கொள்கை நாட்டின்  
   முடியினைப் பெறுவதற்காய் மூட்டிட்ட துவேசத்தீயும் 
   படிப்படியாகப்பற்றி அணைந்தணைந்;து எரியவாங்கே           
   பொடிந்தன பட்டினங்கள் பொலிந்தன அதர்மமெங்கும்.   
                                             
48. கலகங்கள் சிறிதாய்த் தோன்றி கலவரம் பெரிதாய்த் தோன்றி
   பலப்பல அழிவு எல்லாம் படிப்படியாக மேவி     
   அலையலையாக யுத்தம் அடுத்தடுத்தெழுந்து சூழ
   நிலை தடுமாறி மக்கள் இடம்பெயர்ந்தவதியுற்றார்.      
                                                
49. அவதிகள் உற்றபோதும் அல்லல்கள்பட்டபோதும்     
   நவமுறையாகக் கந்தன் ஆலயத் திருப்பணியை   
   சிவமைந்தன் அருளினாலே சிறப்புற நிறைவு செய்து  
   தவ வல்லோர்தம்மைக்கூட்டித் திருமுழுக்கியற்றலுற்றார்.       
                                           
50. ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாமாண்டு  
   ஏயின யுவவருடம் ஆவணித்திங்கள் நாளில்                  
   மேயின உடு உத்தரத்தில் உறு மூன்றாம் குடமுழுக்கு 
   இயற்றிய பின் தொடர்ந்த எழில்பெறு திருவிழாக்கள்.   
                                              
51. விழாக்களும் நிறைவு பெற்று விதிகளும் முறையேயாகி   
   பழமைபோல் மக்கள் தத்தம் கடமைகள் தொடர்ந்து செய்து 
   வழமைபோல் மற்ற ஆண்டும் திருவிழா நிறைவு செய்து  
   தளர்வுறா மக்கள் தத்தம் கருமங்கள் ஆற்றினாரே.        
                                               
52. பொருள்களும் தடைகளாகி புலங்களும் விதைப்பின்றாகி      
   நெருக்கிடப் பஞ்சம் வந்து நிலமையைக் கேழ்வியாக்க  
   வெறுப்புடன் பல்லோர் ஊரைத்துறந்துமே நீங்கிச்செல்ல 
   பொறுப்பற்ற போரும் மேலும் தொடர்ந்தது கொழுந்துவிட்டே.  
                                              
53. கொழுந்துவிட்டெரியப் போரின் உக்கிரம் தொடரவாங்கே  
   எழுந்தது பஞ்சம் மக்கள் இயலாமையோடிருக்க     
   விழுந்தன எறிகணைகள் சரிந்தனர் இருவரங்கே   
   அழுகுரலோடு மக்கள் பிரிந்தனர் ஊரைவிட்டே.       
                                               
54. பொருள்களுமழிந்து வீடு புலங்களுமழிந்ததங்கே
   இருள்சூழ்ந்த வாழ்க்கைபற்றி இன்பங்கள் இரிந்துபோக
   அருள்நிறை கந்தன் கோவில் ஆகிய சேதம்தானே 
   மருளுற்ற ஆணவத்தால் தொடர்ந்தன யுத்தமெங்கும்.        
                                              
55. ஆண்டுகள் ஐந்தாறோட அழுதழுது மக்களோட   
   மாண்டவர் பலபேராக மதிமயங்கியோர் கோடியாக 
   ஆண்டவர் வீரம்பேச அண்டியோர் பேரம்பேச 
   வேண்டாதார் சமாதானத்தை விரும்பாமல் துருத்தியூத.  
                                                     
56. சமாதானப் பேச்சு என்றும் சர்வதேச நீதிஎன்றும் 
   அவதானமாகப் பேச்சு ஆரம்பிப்பதென்றும்  
   ஏமாற்றுக்குணங்கள் கொண்டோர் இழுத்துமே காட்சி காட்ட 
   பாமர மக்கள் நம்பிப் பழமையூர் திரும்பினாரே.  
                                           
57. இழந்திட்ட சொத்து எல்லாம் இதயத்தை வாட்டவாங்கே   
   கழிந்திட்ட காலம்தன்னின் கவலையும் உளத்தில் தாங்கி 
   அழிந்திட்ட வீடுவாசல் அடர்ந்திட்ட பற்றைக்காட்டைச்  
   செழிப்புறவாக்குதற்காய் சிரமத்தின் பணி தொடர்ந்தார்.  
                                           
58. உளச்சுத்தமில்லாப் பேச்சு இடையினில் முறிந்துபோக    
   களத்தினைக் காக்கவென்று இருகன்னையும் கலங்கள் ஏந்த 
   அளவில்லா உயிர்கள் சேதம் அனந்தமாய்ப் பொருட்கள் சேதம்  
   விளக்கமில்லாது மக்கள் வெதும்பியே அலைதலுற்றார்.   
                                              
59. கொடூரங்கள் அறங்கள் பேச கொலைவெறி தர்மம் பேச    
   கடூரங்கள் கருணைபேச கயமைகள் ஓழுக்கம் பேச
   நிட்டூரம் நியாயம் பேச நெறியின்மை நீதி பேச     
   பட்டிட்ட பாட்டை மக்கள் பகரவும் மொழிகளுண்டோ.      
                                                     
60. உலகத்தில் தர்மம் அன்று ஓடியே ஒழித்ததென்னே      
   நிலத்தினில் நீதிமாண்டு நெறிகெட்டுப் போனதென்னே           
   பலத்தினில் பெரியோரெல்லாம் பராமுகமானதென்னே           
   வலம்வந்து அனீதி வாகைசூடியே சிரித்ததென்னே.          
                                              

61. இலட்சமாய் மக்கள் கொலை வெறியினால் அழியவாங்கே   
   மிச்சமாய் உள்ளோர் முள்கம்பியுள் அடைந்துபோக     
   பிச்சாண்டிபோலப் புலம்பெயர்ந்தோர்கள் நீதிகோர     
   அச்சச்சோ மனுஉரிமை அணைந்தபின் முணுமுணுத்த.    
                                                
62. அரசனோ அன்றறுப்பான் தெய்வமோ நின்றறுக்கும்       
   பரனுமே பார்ப்பானென்று பகவான்மேற்பாரம் போட்டு         
   விரக்தியோடிழப்பைத் தாங்கி மீளவும் உயிர்வாழ்வுக்காய்         
   துரதிட்டமான மக்கள் துயரொடு மீண்டார் ஊரே.      
                                                 
63. ஊரினை அடைந்த மக்கள் உளம்நொந்து மரத்தின்கீழும்   
   சூரியன் தகிப்பைத்தாங்கிச் சீலைக்கூடாரக்கீழும்       
   பூரிதமின்றி வேய்ந்த மரக்கொட்டில்தன்னின் கீழும்    
   மூரியபெருமையின்றி முயற்சியைச் செய்தே வாழ்ந்தார்.     
                                                 
64. முருகனின் ஆலயத்தை முழுதுமாய்ப் புனரமைக்க    
   விருப்பினைக்கொண்டு தங்கள் புலம்பெயர் உறவோர்தம்மின்    
   பொருளுதவியைப் பெற்றும் பூரணமுயற்சி செய்தும்          
   உருவாக்கிக் கோவில் நற்திருப்பணி நிறைவு செய்தார்.      
                                                   
65. நிறைவான கரவருடம் நிகழும் ஆவணியாம் மாதம்     
   முறையான உடு உத்தரத்தில் முகிழ்ந்திட்ட திருதியையில் 
   நிறைநாளாம் புதன்கிழமை நேர்ந்திட்ட கன்னிலக்கினம்      
   மறைவல்லோர் வேதமோத மகாகும்பாபிஷேகமாமே. 
                                                வேறு
     
                                                    
66. அகிலத்தில் அன்பு பெருகவே 
   ஆன்மத்தின் சக்தி பெறுகவே  
   இலமென்பது இல்லாமற்போகவே 
   ஈகைகள் எங்கும் சிறக்கவே  
   உலகத்தில் ஒற்றுமை ஓங்கவே 
   ஊக்கமாய் மக்கள் உழைக்கவே 
   நலம்பெற்று நாடு செழிக்கவே 
   நாற்திக்கும் நன்மை பெருகவே
   நிலமெங்கும் நீதி நிலைக்கவே
   நீடூழி மக்களும் வாழவே  
   தலமெங்கும் தயவு பெருகவே
   தாழாண்மை எங்கும் சிறக்கவே 
   பலமாகப் பண்பு வளரவே 
   பாவங்கள் யாவும் ஒழியவே  
   குலதர்மம் என்றும் நிலைக்கவே 
   கூரார்வேற் குமரனைப் போற்றுவோமே.             
 வாழ்த்து
வேறு
அன்போடு அருள்பெருக அகிலத்து உயிரெலாம் இன்போடு வாழ்க வாழ்க  
இன்சொற்கள் ஓங்கிட வன்சொற்கள் நீங்கிட மக்களின் ஒருமை வாழ்க  
கன்மத்தால் வந்திடும் வன்மங்கள் நீக்கிடும் கடவுள் நம்பிக்கை வாழ்க
அன்பினைப்போதித்து உன்மத்தம் போக்கிடும் அறிவுள்ளோர் வாழ்க வாழ்க  
இன்போடினங்களெல்லாம் இறைபக்தியொடு இயல்போடு வாழ்க வாழ்க  
பொன்னையா சுதன் தர்மகுலசிங்கம் புகலும் இக் கவிகள் வாழ்க   
விண்பொய்யா நிறைமாரி பெய்யவே வேளாண்மை நீடூழி வாழ்க வாழ்க  
பண்புளோர் வாழ்கின்ற பதியதாம் புதுக்குளக்கந்தனின் கருணை வாழ்க.  

யாத்தவர்                                                  
பொ.தர்மகுலசிங்கம்.                                 
ஆறுமுகத்தான்புதுக்குளம்.